செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் மறுப்புத் தெரிவித்து விட்டதால், என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து வருகிறார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள்.
சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை கடந்த 7-ம் தேதி காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை, 5 நாட்கள் விசாரணைக்குப் பிறகு 12-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவரது சிறைக்காவல் கடந்த 25-ம் தேதி நிறைவடைந்தது.
இதனிடையே, செந்தில் பாலாஜி மாநில அமைச்சராக இருப்பதால், அவரது வழக்கை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 25-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியை, 28-ம் தேதி வரை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவசங்கர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, 28-ம் தேதி செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர்.
ஆனால், அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில், ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய நீதிபதி ரவி, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி இருந்தார். மேலும், செந்தில் பாலாஜியிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 15-ம் தேதிவரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள், ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு பட்டியலுக்கு வராத நிலையில், பட்டயலுக்கு வரட்டும் பார்க்கலாம் என்று நீதிபதி அல்லி கூறியிருந்தார். இந்த சூழலில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று பட்டியலுக்கு வந்த நிலையில், மேற்கண்ட வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது, சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள், அவசர அவசரமாகச் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஓடினர். அங்கு ஜாமீன் கோரி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியிடம் மனு தாக்கல் செய்தனர். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது. இந்த மனுவை விசாரிக்கும் அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உள்ளதா என்பது உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஆகவே, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தினார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.