கடந்த மார்ச் 19-ம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, சுமார் 50 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியோடு, தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதித்தனர். இத்தாக்குதலை நடத்தியது இங்கிலாந்தைச் சேர்ந்த குர்சரண் சிங், தல் கல்சா, காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அவதார் சிங் காந்தா, ஜஸ்விர் சிங் உள்ளிட்டோர் என்பது தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்தது.
இத்தாக்குதலுக்குத்தான் இங்கிலாந்தின் வணிக மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் கெமி படேனோக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த நாடாக இருந்தாலும், உலக வல்லரசாக இருந்தாலும், எப்போதும் இது போலப் பிரச்சினைகள் இருக்கும். இங்கிலாந்து நாட்டின் குடிமகனில் ஒருவராக நான் இதைச் சொல்கிறேன். பல நேரங்களில், நாம் விரும்பும் பாதையில் மக்கள் ஒருங்கிணைய மாட்டார்கள். லண்டனில் நிகழ்ந்த இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் தூதரகத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்தது மட்டுமின்றி, அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பியிருப்பதோடு, சர்வதேச தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நான் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. இங்கிலாந்து அரசின் சார்பாகப் பேசுகிறேன். இத்தாக்குதல் மிகப் பெரிய அவமானம் . பன்முகத் தன்மை மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட தேசம் இங்கிலாந்து என்று பெருமை கொள்கிறது. ஆனால், தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் பிரிவினைவாதத் தாக்குதல்களின்போது வரக்கூடிய சவால்களை இது போன்ற சம்பவம் நினைவூட்டுகிறது. உலகில் அமைதி நிலவப் பாடுபடும் இங்கிலாந்தில், இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் இணக்கமாக வாழும் சூழ்நிலைக்கு ஏற்படும் சவால்களுக்கு சான்றாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசும், தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதை இங்கிலாந்திலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி விக்ரம் துரைசாமி மற்றும் இந்திய அரசாங்கத்திடம் தெளிவுபடுத்தி இருந்தது.
















