கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப் பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதா (வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
அவர், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம், லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, லஞ்ச பணத்தை, நேரடியாக வாங்கினால், சிக்கிக் கொள்வோம் என டிஜிட்டல் முறையில், அதாவது, ஜி பே, போன் பே மூலமாக மட்டுமே வாங்குவது வழக்கம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே, நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வாராம். இது தொடர்பான புகார், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால், அவரைப் பிடிக்க பொறிவைத்தனர்.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் ஆய்வாளாகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர், விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ளே நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திய போது, உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் மனைகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தாரிடம் இருந்து, சங்கீதா லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.
தொடர்ந்து, காவல்துறையினர், உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவையும் அவருக்கு உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர் உதயகுமார் (வயது 37) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.