தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டான் சேவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
1857-ம் ஆண்டு நடைபெற்ற, முதல் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட, மங்கள் பாண்டே என்ற வீரனுக்கு முன்பாகவே, தர்மத்தை நிலைநாட்ட ராஜ ராஜசோழன் பிறந்த மண்ணிலிருந்து தோன்றிய ஹிந்து வீரன்தான் நமது பூலித்தேவன்.
மகாதேவர் சிவபெருமானின் தீவிர பக்தனான இவர், தனது பெயருக்கேற்றார் போலவே வீரத்துடன் விளங்கினார். தனது ஒப்பற்ற போர் திறமையினாலும், அரசியல் அறிவினாலும், தன்னுள் கொழுந்து விட்டு எறிந்த வீரத்தினாலும், பூலித்தேவன் பிறவியிலேயே ஒரு புரட்சிக்காரனாக விளங்கினார். அதேசமயம், அசட்டுத்தனமான புரட்சி வீரனாக இல்லாமல், அதர்மத்தை எதிர்த்து லட்சிய நோக்கு கொண்ட புரட்சி வீரனாக விளங்கினார்.
1715-ம் ஆண்டு பிறந்த பூலித்தேவன், தனது 18 வது வயதிலேயே 150 கிராமங்களின் தலைவனாக, குறுநில மன்னனாக தலைமையேற்றார். 1759-ல், ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால், தென்னகப் பகுதிகளில் வரி வசூல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஆங்கிலேயனின் பிரதிநிதியான கான்சாகிப் என்பவன், பூலித்தேவனிடம் இருந்து விளைச்சலில் ஒரு பகுதி நெல்லை வரியாகக் கேட்டு வந்தான். ஆனால், “வரி கொடேன்” என்று பூலித்தேவன் மறுத்ததால், இப்பகுதியானது இன்றும் நெற்கட்டான் சேவல் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து 1755 முதல் 1767 வரை போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர் பூலித்தேவன். இறுதியாக, 1767-ம் ஆண்டு நடைபெற்ற போரில் தோல்வியுற்ற பூலித்தேவனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், பூலித்தேவன் சங்கரன்கோயில் உள்ளே அமைந்திருக்கக் கூடிய அவரது வழிபாடு தெய்வமான சிவபெருமானின் லிங்கத்திருமேனியோடு இரண்டற கலந்து விட்டார்.
ஆங்கிலேயருக்கு அடி பணிந்து போகாத பூலித்தேவனின் அரசியல் சாதுரியம், இன்று வரை பெருமிதத்தோடு பேசப்படுகிறது. இன்றளவும் பூலித்தேவன் ஒரு சரித்திர நாயகனாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அவரது 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.