இந்தியா முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களை சாகர் பரிக்கிரமா யாத்திரை திட்டத்தின் மூலம் ஆய்வு செய்து வரும் மத்திய அமைச்சர்கள் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கடல் மார்க்கமாக வந்து மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ,மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், “கடந்த 2014 -ம் ஆண்டு வரை 50 ஆண்டு ஆட்சி காலத்தில் மீன்வளத்துறையில் ரூ.4,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது.
ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 38 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இறால் ஏற்றுமதியில் உலகிலேயே முதன்மை நாடாக இந்தியா உள்ளது.
சென்னை காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதில், காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 -ம் ஆண்டு மீன்வளத்துறையில் 500 ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தற்போது 9 லட்சமாக அதிகரித்துள்ளன என்றும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கிசான் அட்டை திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்கு தேசிய அளவில் இயக்கம் நடத்தப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது” என்றார்.