தமிழகத்தில் புகழ் பெற்ற திருக்கோவிலான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் உள்ளே, பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா உள்ளிட்டவை கொண்டு செல்ல திருக்கோவில் நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
முருகனின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் குடும்பத்தார், தரிசனம் செய்ய சென்றபோது, கருவறையில் உள்ள சுவாமியின் படத்தை போட்டோ எடுக்க முயன்றதாகப் புகார் எழுந்தது.
இதனிடையே, பக்தர் ஒருவர் பழனி மலைக் கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஏற்கனவே, கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படி அனுமதித்தீர்கள் என கோவில் நிர்வாகத்திற்கு, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து, திருக்கோவிலுக்கு வருபவர்கள், மலை அடிவாரம், ரோப் கார் நிலையம், படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் திருக்கோவில் அருகே சிறப்புக் கவுண்டர்கள் அமைத்து அங்கு செல் போன் மற்றும் கேமரா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதியில் உள்ள நடைமுறை போன்றே, சுவாமி தரிசனம் செல்லும் முன், கவுண்டரில் செல் போன் வைத்துவிட்டு, தரிசனம் முடிந்த பின்னர், அதை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.