ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் உச்சி மாநாடும், 18-வது கிழக்கு ஆசிய மாநாடும் நடைபெறுகிறது. ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேஷியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. இந்நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அதேபோல, இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு 8 மணியளவில் இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதிகாலை 3 மணியளவில் ஜகார்த்தா விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, காலை 7 மணியளவில் ஆசியான் இந்தியா உச்சி மாநாடு நடைபெறுகிறது. பிறகு, காலை 8.45 மணியளவில் கிழக்கு ஆசிய மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இம்மாநாட்டில் ஆசியான் நாடுகளின் கடலோர பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு, காலை 11.45 மணியளவில் பிரதமர் மோடி இந்தியா புறப்படுகிறார். மாலை 6.45 மணியளவில் பிரதமர் மீண்டும் டெல்லியை வந்தடைகிறார். மறுநாள் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 3 நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.