மூத்த அரசியல்வாதியான சோனியா காந்திக்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் எப்படி நடைபெறும் என்பது தெரியாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கூட்டி இருக்கிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி எதிர்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அக்கடிதத்தில், “பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்புவதற்கு வாய்ப்பளிக்கும் என்பதால், இந்த சிறப்பு அமர்வில் எதிர்க்கட்சிகள் நிச்சயமாக பங்கேற்க விரும்புகின்றன. ஆனால், கீழ்கண்ட முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், அக்கடிதத்தில் 8 விஷயங்களையும் பட்டியலிட்டிருந்தார். அதில், சீன எல்லை, அதானி, மணிப்பூர் கலவரம், ஹரியானா கலவரம் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சோனியா காந்திக்கு விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்தான், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், சோனியாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், “சோனியா காந்தி போன்ற மூத்த அரசியல் தலைவர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது கூடத் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 85-வது பிரிவு நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாக தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், சிறப்பு அமர்வில் என்ன விவாதிக்கப்படும் என்பது குறித்த அலுவல் குறிப்பு கூட்டத்தின்போது வழங்கப்படும். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்றக் கூட்டம் என்றாலே, அதை அரசியலுக்குள் இழுப்பது வருத்தமளிக்கிறது.
மேலும், நாடாளுமன்றம் என்பது நமது தேசியப் பெருமையின் சின்னம். அதை அரசியல் சர்ச்சைகளுக்குள் இருந்து விலக்கி வைக்க வேண்டும். ஆகவே, சோனியா காந்தியையும், அவரது கட்சியினரையும் சிறப்பு அமர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேசமயம், சர்ச்சைக்குரிய விவாதங்களை தவிர்த்து ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபட வேண்டும். மக்கள் நலனுக்கான அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். காங்கிரஸிடம் எழுப்புவதற்கு உண்மையான பிரச்சினைகள் எதுவும் இல்லை. நாட்டில் பிளவு விதைகளை விதைக்கும் நோக்கில் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறது” என்று கூறியிருக்கிறார்.