திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
இந்துக்கள் பற்றியும், சனாதனம் குறித்தும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணவத்துடன் பேசியதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அமைச்சர் உதயநிதியால், டெங்கு, மலேரியா, கொரோனாவை அழிக்கலாம். ஆனால், இந்து மதத்தையும், சனாதனத்தையும் அழிக்கவே முடியாது. ஏன் என்றால், அது மக்களின் உள்ளத்திலும், உணர்விலும், ரத்தத்திலும் கலந்துவிட்ட ஒன்று.
ஆட்சியில் இருப்பவர்கள் இப்படிப் பேசலாமா?
அதுவும் சனாதனம் குறித்து வாய்க்கு வந்தபடி பேசலாமா? சனாதனம் குறித்துப் பேச ஒரு தகுதி வேண்டாமா?
இந்துக்களை மலேரியா, டெங்கு மாதிரி கொலை செய்துவிடுவேன் என பேசிய நபரை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அரசு உடனே கைது செய்ய வேண்டும்.
சனாதனம் குறித்த பேச்சிற்கு பாஜக மட்டுமல்ல காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சனாதனம் குறித்துப் பேசியவர்கள் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இதில், மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
எனவே, இந்துக்களையும், சனாதனத்தைப் பற்றி அவதூறு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாஜக சார்பில் புகார் கொடுக்க உள்ளோம்.
உதயநிதி ஸ்டாலின் பேசியதை மொழி பெயர்த்து ஹிந்தியில் வெளியிட்டால், இவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு, வரும் தேர்தலில் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்றார்.