இந்தோனேஷியா சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லி திரும்பினார். நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
இந்தோனேஷியாவில் 20-வது ஆசியான் இந்தியா மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவை நேற்றும், இன்றும் நடைபெற்றன. இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பு விடுத்திருந்தார்.
இதை ஏற்று பிரதமர் மோடி, நேற்று இரவு இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றார். தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய நேரப்படி காலை 7 மணியளவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இம்மாநாடு நிறைவடைந்த பிறகு, கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இம்மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், பிற்பகலில் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மோடி, இரவு டெல்லியை வந்தடைந்தார். வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 3 நாடுகளின் தலைவர்கள் நாளை வருகை தருகிறார்கள். இவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.