முக்கியக் குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ முறையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி – அதிலா பானு தம்பதிகளுக்கு முகமது அஸ்லம் (7) என்ற மகனும், அஜிராபானு (5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரோஸ்லின் என்பவர் கொலை வழக்கில் முக்கியச் சாட்சியான முத்துசாமி, நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி அளித்ததால் ரோஸ்லின் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர், முத்துசாமி சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கு, ரோஸ்லின் உறவினர் சாகுலுடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, முத்துசாமியின் கை விரலை சாகுல் உடைத்துள்ளார். இத்தகவலறிந்த அதிலா பானு, சாகுலை கடுமையாகத் திட்டியுள்ளார். இந்த சூழலில், கடந்த 8.11.2010 அன்று மகன், மகளுடன் அதிலா பானு கடத்தப்பட்டார்.
பின்னர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிலா பானு மற்றும் அவரது மகன், மகளின் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு முதலில் மாநில காவல்துறையினர் வசமும், பின்னர் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி, அதிலா பானு உறவினர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறினர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் கூட விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அந்தளவுக்குச் சாட்சிகள் மிரட்டப்பட்டுள்ளனர் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161 மற்றும் 164 பிரிவின் கீழ் சாட்சிகள் வாக்குமூலத்தை ஆடியோ – வீடியோ எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், திருத்தம் செய்யப்பட்டு, 14 ஆண்டுகளாகியும், இதை உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் கண்காணிக்காமல் உள்ளனர் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இனி வரும் காலத்தில் ஆடியோ- வீடியோ காட்சி முறையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பிறழ் சாட்சியம் தடுக்கப்படும். ஆகவே, முக்கிய வழக்குகளில் 161 வாக்குமூலங்களை ஆடியோ- வீடியோ முறையில் பதிவு செய்ய வேண்டும் என உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டனர்.