வால்பாறைக்குச் செல்ல வனத்துறையினர் திடீர் கட்டுப்பாடு விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி வால்பாறை. இதன் இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சூழலில், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா முன்னிலையில், ஆழியாறு சோதனைச் சாவடியில் வனத்துறை சார்பில் அண்மையில் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில், வால்பாறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குக் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் வேகமாக பரவி, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து, வனத்துறையினர் கூறுகையில், “தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் வன விலங்குகள், தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. அந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை வனத்துக்குள் அனுமதித்தால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சுற்றுலா வரும் பயணிகளுக்கு வனவிலங்குகளிடம் எப்படி நடந்து கொள்வது என தெரியாது. இது போன்ற பிரச்சினைகள் காரணமாகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
எனவே, வால்பாறைக்குச் சுற்றுலா செல்பவர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, தங்கள் சுற்றுலாப் பயண திட்டத்தை அமைத்துக் கொண்டால், இனிய சுற்றுலாவாக அமையும்.