தமிழக அரசு நியாய விலைக் கடைகளில், வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் அரிசி, பருப்புக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தொழிலாளர்களின் நலன் கருதி, ஒரே நாடு, ஒரே ரேஷன் கடை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடிமகனும் எந்த மாநிலத்தில் இருந்தாலும், மத்திய அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும். உதாரணமாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வசித்தால், அங்குள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம். அதேபோல், வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வாங்க முடியும்.
இந்த நிலையில், தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தில், பயனாளிகளைத் தேர்வு செய்ய விண்ணப்பம் வழங்கி, சிறப்பு முகாம் நடத்தி விரல் ரேகை பதிவு செய்தது. இதற்காக, நியாய விலைக் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால், கடந்த ஜூலை மாதம் முதல் வெளி மாநிலத்தவர்களுக்குப் பொருட்கள் வழங்குவது தற்காலமாக நிறுத்தப்பட்டது. பிறகு, ஆகஸ்ட் மாதம் முதல் பொருட்கள் வாங்க மீண்டும் அனுமதி வழங்கியது.
ஆனால், நியாய விலை அட்டைகளுக்கு ஏற்ப கூடுதல் பொருட்கள் வழங்கப்படவில்லை என்று வெளி மாநிலத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நியாயவிலைக் கடை அலுவலர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, “குறைந்த அளவு இருப்பு உள்ளதால், வெளி மாநிலத்தவர்களுக்குப் பொருட்கள் வழங்க முடியவில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, சரியான அளவு பொருட்களை வழங்கினால், அனைவருக்கும் பொருட்கள் வழங்க முடியும்” என்று தெரிவித்தனர்.