மத்திய அரசு அலுவலகங்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பு ‘தூய்மை’ பிரசாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி, அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூய்மை பிரசாரம் மத்திய அரசால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதன் துறை சார்ந்த அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையற்ற பொருட்கள் மற்றும் கோப்புகளை அகற்றுவது, நிலுவையில் உள்ள குறைதீர் மனுக்களுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
இந்த ஆண்டுக்கான தூய்மைப்படுத்தும் சிறப்புத் தூய்மை பிரச்சாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவா் கூறுகையில், மத்திய அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதையும், நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ள மனுக்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
2022-ஆம் ஆண்டு சுமாா் 1.37 இலட்சம் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், 50 இலட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. அலுவலகங்களில் இருந்த பயனற்ற பொருட்கள் அகற்றப்பட்டு, 172 இலட்சம் சதுர அடியிலான பரப்பு தூய்மைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அளித்த 31.35 இலட்சம் குறைதீர் மனுக்களுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு, அகற்றப்பட்ட பழைய பொருட்களிலிருந்து ரூபாய் 520 கோடி வருவாய் கிடைத்தது. இந்த வருவாயை நடப்பாண்டில் ரூ.1,000 கோடியாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரசாரத்தின் முன்னேற்பாடு நடவடிக்கையாகச் செப்டம்பர் 15 முதல் 30 வரை, தூய்மைப்படுத்தப்பட வேண்டிய அலுவலகப் பகுதிகள் கண்டறியப்படும். இந்தப் பணியை மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செப்டம்பர் 14-இல் தொடங்கி வைப்பாா் என்று அவர் தெரிவித்துள்ளார்.