கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக, பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கியது.
சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் தனியார் பேருந்துகள் மற்றும் அட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திங்கள் கிழமை அன்று நடைபெற்ற பந்த் காரணமாக, அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தமிழகத்திலிருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூர் நோக்கி தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பேருந்து இயக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் பணி மணிக்குச் சொந்தமான நான்கு அரசு பேருந்துகள் மீது பெங்களூர் மைசூர் சதுக்கம் அருகே மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.
இந்த தாக்குதலில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் உயிர் சேதமுமோ அல்லது படுகாயமோ ஏற்படவில்லை.
இது தொடர்பாக, பேருந்து நடத்துநர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.
காங்கிரஸ் அரசின் அலட்சியமே, தமிழக பேருந்துகள் தாக்கப்படக் முக்கிய காரணம் என்றும், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு கர்நாடக காவல்துறை உரிய முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.