மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 3 நாட்கள் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அதன் தலைவர் மோகன் பகவத் மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாடு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், வித்யாபாரதி, சக்ஷம், பாரதிய மஸ்தூர் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம், சேவாபாரதி, ராஷ்டிர சேவிகா சமிதி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க., பாரதிய கிசான் சங்கம் மற்றும் சங்கத்துடன் இணைந்த 36 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை முதல் சமூக நல்லிணக்கம் பேணுவது வரையிலான பிரச்னைகள் விவாதிக்கப்படுகின்றன. அதாவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, வாழ்க்கை மதிப்பு அடிப்படையிலான குடும்ப அமைப்பு, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துதல், சுதேசி, குடிமக் கடமைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தலைப்புகள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன. மேலும், நாட்டின் தற்போதைய சமூக பொருளாதார சூழ்நிலையும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.