சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
சென்னையில் இடது சாரி அமைப்பு ஒன்று சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இம்மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களும், இந்து அமைப்புகளும் உதயநிதிக்கு எதிராக கொந்தளித்தனர்.
மேலும், உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, முக்கியப் பிரமுகர்கள் பலரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இது தவிர, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அதேபோல, உதயநிதியின் தலைக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் விலை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில், “தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.