கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை நேரத்தில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பத்தில் தொடர்புடைய பலரையும் என்.ஐ.ஏ. கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அவ்வப்போது தமிழகத்தில் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு, ரசாலிபுரம் தெருவைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வீட்டுக்குள் நுழைந்தது. இன்ஜினீயரான இவர், சென்னையில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, முகமது இத்ரிசின் செல்போனுக்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்து குறுந்தகவல்கள் வந்ததாகவும், அதனடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. குழுவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல, கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதாக தேசிய புலனாய்வு முகாமைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளை குறிவைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் ஜி.எம்.நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை உட்பட 22 இடங்களிலும், சென்னையில் திரு.வி.க. நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீடு உட்பட மொத்தம் 30 இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது.