ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு, 12 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, தற்போது “இண்டியா” கூட்டணி என்கிற புதிய பெயரில் வந்திருக்கிறார்கள். பிரதமர் பதவி ஒன்றும் காலியாக இல்லை. அப்பதவியில் மோடியே மீண்டும் அமர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுப்பது, பிரசாரம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் “லோக் சபா பிரவஸ்” எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், உள்துறை அமைச்சரான அமித்ஷா, பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் “லோக் சபா பிரவஸ்” திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜஞ்சர்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “இண்டியா கூட்டணி சுயநலம் வாய்ந்தது. லாலு யாதவ் தன்னுடைய மகனை பீகார் முதல்வராக்க வேண்டும் என்று விரும்புகிறார். நிதீஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், இதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால், பிரதமர் பதவி காலியாக இல்லை. அப்பதவியில் மோடிதான் மீண்டும் அமரப் போகிறார்.
இந்தக் கூட்டணி பீகாரை திரும்பவும் காட்டாட்சிக்கு கொண்டு செல்கிறது. திருப்திப்படுத்துவதன் வழியாக, அதுபோன்ற சக்திகளிடம் அவர்கள் பீகாரை ஒப்படைக்கப் பார்க்கிறார்கள். இதனால் பீகார் பாதுகாப்பு பெறாது. மேலும், எதிர்கட்சிகள் புதிய பெயருடன் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றனர்.
இரயில்வே அமைச்சராக இருந்தபோது, லாலு யாதவ் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருக்கிறார். ஆகவே, அதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரை வைத்துக் கொண்டு மீண்டும் தேர்தலை சந்திக்க முடியாது. இதன் காரணமாகவே, பெயரை மாற்றி புதிய பெயரில் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும், இக்கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்.
ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.