மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை. மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி இருக்கிறார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இம்மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது, பெண்கள் முன்னேற்றத்தில் மோடி தலைமையிலான அரசுக்கு உள்ள முழு ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. இதில் வருத்தம் என்னவென்றால், இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டதை எதிர்க்கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது. மகளிருக்கான சட்டங்களை காங்கிரஸ் காலாவதியாக விடலாம் அல்லது மசோதா தாக்கல் செய்வதை அதன் நட்புக் கட்சிகள் தடுத்திருக்கலாம். திட்டத்தின் பலனை எடுத்துக்கொள்ள அவர்கள் எந்தசெயலில் ஈடுபட்டாலும் காங்கிரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வராமல் இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.