வாரணாசியில் ரூ.350 கோடியில் சிவன் வடிவில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அகமதாபாத்தில் ரூ.850 கோடியில் கட்டப்பட்ட நரேந்திர மோடி மைதானம் மிகப்பெரிய மைதானமாக உள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ரூ.350 கோடி மதிப்பில் புதிய மைதானம் அமைக்கப்படவுள்ளது. 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்த மைதானம் கட்டப்படவுள்ளது. அதேபோல் இந்த மைதானம் சிவனின் உருவத்தை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சிவனின் திரிசூல வடிவத்திலான விளக்கு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் மைதானத்தின் மேற்கூரைகள் சிவன் தலையில் இருக்கும் பிறைநிலை போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருக்கைகளும் அதேபோல் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த மைதானத்தை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்த மட்டும் ரூ.120 கோடியும், கட்டுமான பணிகளுக்காக ரூ.350 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் மொத்தமாக 7 பிட்ச்கள், வீரர்களுக்கான பயிற்சி கூடங்கள், பயிற்சி மைதானங்கள், ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு கூடங்கள், விஐபி பாக்ஸ் என்று அனைத்து வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. இந்த மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த விழாவில் முன்னாள் வீரர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். அதேபோல் மைதானத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து 2025ஆம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது