சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ. இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இதன் பிறகு, தரையிறங்கிய இடத்தில் இருந்தே லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வு செய்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்ததால் சிவசக்தி புள்ளியில் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.
நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், மீண்டும் பகல் தொடங்கிய, கடந்த 22-ம் தேதி விக்ரம் லேண்டரையும், ரோவரையும் மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. எனினும், சிக்னலை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. அதேசமயம், அது வராது என்றும் என்னால் கூற முடியாது. நாம் காத்திருக்க வேண்டும். பகல் நேரத்தில் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும். அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். அதேபோல, நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த முத்திரைகள் நிலவின் மேற்பரப்பில் பதியவில்லை.
இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவில் மண் தூசியாக இல்லாமல் திடமாக இருந்திருக்க வேண்டும். மேலும், தென்துருவப் பகுதியிலுள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது. அதேபோல, நிலவில் தண்ணீரை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.