அரசு நிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க உரியச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள 3.45 ஏக்கர் நிலம் ஹோட்டல் சரவண பவனுக்கு விற்கப்பட்டது. துரைசாமி நாயுடுவின் வாரிசிடம் இருந்து 1994 மற்றும் 1996 -ஆம் ஆண்டில் வெவ்வேறு விற்பனை ஆவணங்கள் வாயிலாக இந்த இடத்தை ஹோட்டல் நிர்வாகம் வாங்கியுள்ளது. மேலும் அந்த நிலத்தைக் கிராம நத்தம் என்றும் வகைப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் பவர் ஆப் அட்டனர்னி கொடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலத்திற்குப் பட்டா கேட்டு விண்ணப்பித்ததை அமைந்தகரை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிராகரித்தனர். சதுர அடி 12,500 அளவில் 3.45 ஏக்கர் நிலத்தையும் பாஷ்யம் கட்டுமான நிறுவனத்திற்கு மற்ற 2021 -ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை 2022 -ல் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், 2022-ம் ஆண்டு போடப்பட்ட அரசாணை ரத்து செய்து, தங்களது நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும் எனப் பாஷ்யம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தாங்கள் வாங்கியிருப்பது அரசு புறம்போக்கு நிலம் அல்ல எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூகத்தில் அதிக செல்வாக்கு உள்ள நபர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நில அபகரிப்பில் இதுவும் ஒன்று. இதில் வருவாய் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.
அரசு புறம்போக்கு நத்தம் நிலத்தைப் பாஷ்யம் நிறுவனத்திற்கு, தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு முன்பு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சி மாறியதும் ஏற்கனவே வழங்கப்பட்டதை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, தண்டனை வழங்கச் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என நீதிபதி ஆலோசனை தெரிவித்தார்.
மேலும், நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் பொறுப்பான அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவை எடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.