பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்பால் சிங், போதைப் பொருள் மற்றஉம் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் சுக்பால் சிங் கைரா. இவர், அம்மாநிலத்தின் போலாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சுக்பால் சிங், கடந்த 2014-ம் ஆண்டு இறுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து, சுக்பால் சிங் கைரா மீது கடந்த 2015-ம் ஆண்டு ஜலாலாபத் காவல்நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில், சுக்பால் சிங் உட்பட 9 பேருக்கு போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் பஞ்சாப் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது. எனினும், இந்த உத்தரவை எதிர்த்து சுக்பால் சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுக்பால் சிங்குக்கு எதிரான விசாரணையை நிறுத்தி வைக்கும்படி கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த சமயத்தில் அவர் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனினும், தன் மீதான வழக்குக்குப் பின்னணியில் ஆம் ஆத்மி கட்சியினரின் சதி இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழலில், 2018-ம் ஆண்டு சுக்பால் சிங் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, புதிய கட்சி தொடங்கிய சுக்பால் சிங் கைரா, கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பழைய வழக்கு தொடர்பாக சுக்பால் சிங் கைராவின் வீட்டில் இன்று காலை காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதை சுக்பால் சிங் முகநூல் பக்கத்தில் லைவ் காணொளியாக வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சுக்பால் சிங்கை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜாவார்ரிங் தனது எக்ஸ் பக்கத்தில் ஆம் ஆத்மி அரசை கடுமையாக தாக்கி இருக்கிறார். “சுக்பால் சிங்கின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இது எதிர்க்கட்சிகளை மிரட்டும் முயற்சி. மேலும், முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப ஆம் ஆத்மி அரசின் தந்திர நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.