பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல், தனியார் நிறுவனம்போல நடத்தி வருகிறார்கள். இரண்டுமே ஊழல் மற்றும் கமிஷனுக்கு பெயர் பெற்ற கட்சிகள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை, இரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற முக்கியத் துறைகளில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தெலங்கானா அரசு ஒரு கார். ஆனால், ஸ்டீயரிங் வேறு ஒருவரின் கையில் இருக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் முன்னேற்றம் இரண்டு குடும்பக் கட்சிகளால் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த 2 குடும்பங்களும் நடத்தும் கட்சிகள் ஊழல் மற்றும் கமிஷனுக்கு பெயர் பெற்றவை. மேலும், இந்த 2 கட்சிகளும் ஒரே ஃபார்முலாவைக் கொண்டிருக்கின்றன.
கட்சிதான் குடும்பம், குடும்பம்தான் கட்சி மற்றும் கட்சியே குடும்பத்திற்கானது என்பதுதான் அந்த ஃபார்முலா. மேலும், இவர்கள் ஜனநாயகத்தை குடும்ப வம்சமாக மாற்றுகிறார்கள். அவர்களின் கட்சி ஒரு தனியார் லிமிடெட் கம்பெனி போல் நடத்தப்படுகிறது. தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குனர், பொருளாளர், பொது மேலாளர், தலைமை மேலாளர் மற்றும் மேலாளர் என அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம், வெளியில் இருந்து சிலரை துணை ஊழியர்களாக வைத்திருக்கிறார்கள்.
சமீபத்திய ஆண்டுகளில், மக்களவை, சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், தெலங்கானா மக்கள் பா.ஜ.க.வை பலப்படுத்தி இருக்கிறார்கள். இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டம் தெலங்கானா மாற்றத்தை விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், அது வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை விரும்புகிறதே தவிர, பொய்யான வாக்குறுதிகளை அல்ல. தெலங்கானா இப்போது பா.ஜ.க. ஆட்சியை விரும்புகிறது.
விவசாயிகளுக்கான திட்டங்களின் மூலம் மாநில அரசு பணத்தை சுரண்டி வருகிறது. பாசனத் திட்டம் என்கிற பெயரில் தெலங்கானாவில் ஊழல் நடந்திருக்கிறது. தெலங்கானாவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பொய்யான வாக்குறுதிகளால் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் பிரச்னைகளில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை. அதேசமயம், தெலங்கானாவில் எங்களது அரசு இல்லை. எனினும், விவசாயிகளுக்கு எல்லா உதவிகளையும் செய்தோம். பல ஆண்டுகளாக மூடப்பட்ட ராமகுண்டம் உர ஆலையை மீண்டும் தொடங்கினோம்.
முழுகு மாவட்டத்தில் 900 கோடி ரூபாய் செலவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு பழங்குடியின பெண் தெய்வங்களான சம்மக்கா சாரக்கா பெயர் சூட்டப்படும். இங்குள்ள ஊழல் அரசு இதில் ஆர்வம் காட்டியிருந்தால் இப்பல்கலைக் கழகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டி இருக்கலாம். பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கும் பணியை மாநில அரசு 5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கிறது. பழங்குடியினர் நலனில் தெலுங்கானா அரசு அக்கறை காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி மகபூப்நகரில் ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ஏராளமான பா.ஜ.க.வினர் சாலையின் இருபுறமும் வரிசையில் நின்று பிரதமர் மோடி மீது மலர் தூவி ஆரவாரம் செய்தனர்.