சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சனாதன தர்மம் ஒன்றே மதம். மற்றவை அனைத்தும் வழிபாட்டு முறைகள் மட்டுமே என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
மஹந்த் திக் விஜய் நாத்தின் 54-வது நினைவு தினம் மற்றும் தேசியத் துறவி மஹந்த் அவைத்ய நாத்தின் 9-வது நினைவு தினம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்நாத் கோவிலில் ‘ஸ்ரீமத் பகவத் கதா ஞான யாகம்’ கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “சனாதன தர்மம் மட்டுமே மதம். மற்ற அனைத்துப் பிரிவுகளும் வழிபாட்டு முறைகள் மட்டுமே. சனாதனம் மனித குலத்தின் மதம். அது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கான நெருக்கடி ஏற்படும்” என்றார்.
மேலும், அவர் பேசுகையில், “பகவத்தின் கதை எல்லையற்றது. குறிப்பிட்ட நாட்கள் அல்லது குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் அதை முடித்து விட முடியாது. பகவத்தின் சாரத்தை பக்தர்கள் தங்களது வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் மற்றும் சமூகத்தின் தேவைகள்தான் ஒரு துறவியின் முன்னுரிமை. மஹந்த் திக் விஜய் நாத் அப்படிப்பட்ட ஒரு துறவி. அவர் தனது காலத்தின் சவால்களை எதிர்த்துப் போராடினார்.
மஹந்த் திக் விஜய் நாத் ராஜஸ்தானின் மேவாரில் உள்ள ராணா குலத்தைச் சேர்ந்தவர். நாட்டின் சுயமரியாதைக்காகப் போராடும்போது தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சமய மற்றும் அரசியல் சடங்குகளில் ஈடுபட்டு சமுதாயத்திற்கு புதிதாக ஏதாவது செய்ய முயன்றார். மஹந்த் திக் விஜய் நாத், கோரக்ஷ்பீத்தில் சேர்ந்த பிறகு, முதலில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, மகாராணா பிரதாப் கல்வி கவுன்சிலை நிறுவினார்.
இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய உணர்வை தூண்டுவதற்காக, அவர் தனது நிறுவனங்களை விரிவுபடுத்தினார். அவரால் நிறுவப்பட்ட கல்விக் கவுன்சில் ஒரு பல்கலைக்கழகத்தையே நிறுவி இருக்கிறது. தவிர, 48 கல்விப் பயிற்சி நிறுவனங்களை நிறுவி, நாடு மற்றும் சமூகம் தொடர்பான சவால்களைச் சமாளிக்க இளம் தலைமுறையினரை தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது” என்றார்.