சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் காங்கிரஸ் அரசால் மாநில மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். மாநிலத்தின் வளர்ச்சி போஸ்டர்களில் மட்டுமே தெரிகிறது என்று காங்கிரஸ் அரசை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், நாகர்நாரில் 23,800 கோடி ரூபாய் கட்டப்பட்ட எஃகு ஆலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஜக்தல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “சத்தீஸ்கர் மாநில மக்களுக்கு மோசடி மற்றும் ஊழல் அரசாங்கத்தை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது. ஊழலும், குற்றங்களுமே அதிகமாக உள்ளன.
மாநிலத்தின் வளர்ச்சி போஸ்டர்களில் மட்டுமே தெரிகிறது. இதனால் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். மேலும், மாநிலத்தின் நிலைமையையும் காங்கிரஸ் அரசு சீரழித்து விட்டது. சில சமயங்களில் ராஜஸ்தான் மாநிலத்தைப் போலவும் தெரிகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் குற்ற விகிதத்தில் போட்டி போடுகின்றன. ஆகவே, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் உருக்கு ஆலையைக் கைப்பற்றி, அதன் மூலம் நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள். இந்த எஃகு ஆலை பஸ்தார் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை காங்கிரஸ் கட்சியினரை கைப்பற்ற விடமாட்டேன்.
இந்த உருக்குத் தொழிற்சாலையின் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு மேலும் சில எஃகு தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். எதிர்வரும் ஆண்டுகளில் நாடு முழுவதிலும் இருந்து இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பஸ்தாருக்கு வருவார்கள். காங்கிரஸ் கட்சி பஸ்தர் பகுதியை பல ஆண்டுகளாக புறக்கணித்து வந்தது. காங்கிரஸ் ஒருபோதும் மக்களின் நலன்களைப் பற்றி சிந்தித்ததில்லை. இங்கு பா.ஜ.க. பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. குறிப்பாக, பழங்குடியின மக்களுக்கு காங்கிரஸை விட பா.ஜ.க. 5 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
மாநிலத்தில் காங்கிரஸ் உட்கட்சி பூசலை எதிர்கொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் 2 காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருப்பதால், மக்கள் பணிகளில் கவனம் செலுத்த நேரம் இல்லை. இரண்டாவதாக, மோடி. எந்த ஊழல்வாதியும் மோடியை கண்களால் பார்க்க முடியாது” என்றார்.