16 சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரனுக்கு, குறைந்தபட்சம் 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோஸ்டா மேஸா பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி. இவர், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சில வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வந்தார்.
மேத்யூ தன்னை அசல் குழந்தை பராமரிப்பாளர் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார். மேலும், குழந்தைகளுக்கு சிறந்த ஆலோசனை வழங்குபவராகவும், நல்ல சகோதரனாக இருப்பதாகவும், விடுமுறைக் காலங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாகவும் மேத்யூ தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இதனால், அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பலர், மேத்யூவைக் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் அமர்த்தினர்.
அமெரிக்காவில் குழந்தைகளைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லகுனா பீச் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சி செய்ததாக புகாரளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை, மேத்யூ இதற்கு முன்பு பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விசாரணையைத் தீவிரமாக்கிய காவல்துறை, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனிடமும், தெற்கு கலிபோர்னியாவில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் மேத்யூ தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை, மேத்யூ 16-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிறுவர்கள் அளித்த சாட்சியின் பேரில், ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில், அந்நாட்டு ஜூரி அமைப்பு மேத்யூ செய்த குற்றத்தை உறுதி செய்தது. இதன் காரணமாக, மேத்தாவுக்குக் குறைந்தபட்சம் 690 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.