ராஜஸ்தானில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்காதது குறித்து கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர மோடி, “மோடி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. இரு கட்சியின் நிர்வாகிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இது அரசு திட்டம். ஆனால், மாநில முதல்வர் வரவில்லை. அவர் ஏன் வரவில்லை? மோடி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.
நான் அவரிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஓய்வெடுங்கள், எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று ஜோத்பூர் மக்கள் ஒரே நேரத்தில் பல பரிசுகளை பெற்றிருக்கின்றனர். நான் ஏற்கெனவே டெல்லியில் இருந்து ஒரு சிறப்புப் பரிசுடன் தயாராக வந்திருக்கிறேன். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு எரிவாயு உருளை வழங்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.
அதன்படி, ரக்ஷா பந்தனின்போது சமையல் எரிவாயு உருளைக்கு 400 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது நவராத்திரி, தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இது சமையலை மாசு இல்லாததாக மாற்றுவதற்கான எங்களின் முயற்சியாகும். மேலும், உங்கள் ஆரோக்கியமே எங்களின் முன்னுரிமை. ஒரு பக்கம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை வசதிகளை வழங்குகிறோம். மறுபுறம், நவீன மருத்துவமனைகளை சாதனை எண்ணிக்கையில் கட்டி வருகிறோம்.
இது ஒருபுறம் இருக்க, ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கிறது. இதை யாரால் செய்ய முடியும்? மோடியால் மட்டுமே செய்ய முடியாது. உங்கள் வாக்குகளால்தான் அதைச் செய்ய முடியும். உங்கள் வாக்கு பலத்தால் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். மேலும், சுற்றுலாவில் முதல் மாநிலமாக மாறும்” என்றார்.