ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 புதிய இரயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த 2-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சூழலில், இன்று மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பயணம் செய்தவர், சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். மேலும், 2 புதிய இரயில்களுக்கான சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில், ஜெய்சால்மர் – டெல்லியை இணைக்கும் புதிய இரயிலான ருனிச்சா எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வார் சந்திப்பு – காம்ப்ளி காட் ஆகியவற்றை இணைக்கும் புதிய பாரம்பரிய இரயில் ஆகியவை அடங்கும். இது தவிர, மேலும் 2 ரயில் திட்டங்களும் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில், 145 கி.மீ. நீளமுள்ள ‘தேகானா-ராய் கா பாக்’ இரயில் பாதை மற்றும் 58 கி.மீ. நீளமுள்ள ‘தேகானா-குச்சமன் சிட்டி’ இரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டங்களும் அடங்கும்.
மேலும், ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 350 படுக்கைகள் கொண்ட ‘அவசர மற்றும் தீவிர சிகிச்சை மையம்’ மற்றும் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மிஷன் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 7 தீவிர சிகிச்சை மையங்களையும் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.
அதேபோல, ஜோத்பூர் விமான நிலையத்தில் மொத்தம் 480 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் அதிநவீன புதிய டெர்மினல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிறுவனம் 1,135 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் அதிநவீன வளாகமாகக் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘மத்திய கருவி ஆய்வகம்’, பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் ‘யோகா மற்றும் விளையாட்டு அறிவியல் கட்டடம்’ ஆகியவற்றையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் மத்திய நூலகம், 600 மாணவர்கள் தங்கும் வகையிலான விடுதிக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர, பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 1,475 கோடி ரூபாய் செலவில் சாலைத் திட்டங்கள் கட்டப்படுகிறது. இதில், ஜோத்பூர் ரிங் ரோடு போக்குவரத்து அழுத்தத்தைக் குறைக்கவும், நகரத்தில் வாகன மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்.