மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.
ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா மத்திய அரசால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘வீராங்கனை ராணி துர்காவதி ஸ்மாரக் அவுர் உதயன்’ என்கிற திட்டத்தின் மூலம் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ராணி துர்காவதி போன்ற வீராங்கனைகள் எந்த நாட்டில் இருந்திருந்தாலும், அவர்கள் அவரது பெருமையை உலகம் முழுவதும் கொண்டாடி இருப்பார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் இதேதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, நமது மாவீரர்கள், நமது தலைவர்கள் மறக்கப்பட்டனர்.
சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் ராணி துர்காவதி ஸ்மாரக் பூமிபூஜை செய்தோம். ஒருவரின் பிறந்த இடத்திற்கு உழைக்க, அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நூற்றாண்டு விழாவில், ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்திற்கும், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும், நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த கட்சியினர், ஒரே ஒரு காரியத்தை மட்டுமே செய்தார்கள். அது ஒரு குடும்பத்திற்கான வழிபாடு. ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு குடும்பத்தால் நாடு முன்னேற்றமும் அடையவில்லை. மாநிலத்தில் இன்று 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
இது தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் 4 வழிச் சாலை திட்டங்கள். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும். இது விவசாயிகளுக்கு பயனளிக்கும். அதோடு, இத்திட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 11 கோடி பேரின் போலிப் பெயர்களை நீக்கி விட்டோம். இந்த 11 கோடி போலிப் பெயர்கள் ஏழைகளின் பங்கைப் பறிக்கின்றன. தற்போது உஜ்வாலா பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும். மேலும், சிலிண்டர்களுக்கு பதிலாக எரிவாயு குழாய்கள் மூலம் மலிவான எரிவாயுவை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்றார்.