கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன என்று பெருமிதம் தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத அளவுக்கு செயல்படவும் அறிவுறுத்தி இருக்கிறார்.
டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) ஏற்பாடு செய்திருந்த 2 நாள் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய அமித்ஷா, “கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. என்.ஐ.ஏ.வின் கீழ் மாதிரி பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளின் விசாரணையின் படிநிலை, கட்டமைப்பு மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், மத்திய, மாநில அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத வகையில், அனைத்து தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளும் இரக்கமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
என்.ஐ.ஏ., தீவிரவாத எதிர்ப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றின் பணி, விசாரணைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலக அளவில் இருந்து அடிமட்டம் வரை ஒத்துழைப்புத் தேவை.
மேலும், கிரிப்டோ, ஹவாலா, தீவிரவாத நிதியளிப்பு, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள், தீவிரவாதத் தொடர்புகள் போன்ற அனைத்து சவால்களிலும் பிரதமர் நரேந்திர மோடி அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஆனாலும், இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது” என்றார்.
நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பதக்கங்களையும் அமித்ஷா வழங்கினார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “டெல்லியில் நடைபெற்ற 3-வது பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நமது தேசம் தீவிரவாதத்தை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளின் தொடர்ச்சியான முயற்சிகள், நமது நாடு அதன் இலக்கை விரைவில் அடைவதை உறுதி செய்யும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
At the 3rd Anti-terror Conference held in Delhi today distributed medals to the best performing NIA officers. Under the leadership of PM @narendramodi Ji our nation has adopted the goal of eradicating terrorism. The continued efforts of the anti-terror agencies will ensure that… pic.twitter.com/2cQnW9WZov
— Amit Shah (@AmitShah) October 5, 2023