காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டிருக்கும் பா.ஜ.க., அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் இயக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் தயாரிப்பில் இப்படம் வெளியாகி இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே, ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இரு கட்சிகளும் பரஸ்பரம் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. இந்த சூழலில், பாரதப் பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சமீபத்தில் ஒரு காணொளியை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. அக்காணொளியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடம்பெறவில்லை. இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பா.ஜ.க. தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது. அப்பதிவில், “இவர்தான் புதியுக ராவணன். இவர் ஒரு அரக்கன். தர்மத்துக்கு எதிரானவர். ராமனுக்கு எதிரானவர். பாரதத்தை அழிப்பதே இவரது நோக்கம்” என்று குறிப்பிட்டு, திரைப்பட போஸ்டர் போல ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. அப்போஸ்டரில், இந்தியா ஆபத்தில் இருக்கிறது என்று தலைப்பிட்டு, ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்திருக்கிறது. மேலும், இப்படம் காங்கிரஸ் கட்சியின் தயாரிப்பில், ஜார்ஜ் சோரஸ் (அமெரிக்கா- கோடீஸ்வரர்) இயக்கத்தில் உருவாகி இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
The new age Ravan is here. He is Evil. Anti Dharma. Anti Ram. His aim is to destroy Bharat. pic.twitter.com/AwDKxJpDHB
— BJP (@BJP4India) October 5, 2023
மேலும், அந்த போஸ்டருடன் மற்றொரு காணொளியையும் பா.ஜ.க. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்தக் காணொளி, “கமாண்டியா கோப்புகளின் நான்காவது அத்தியாயத்தைப் பாருங்கள்! மேற்குவங்கத் தேர்தலில் வெற்றிபெற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் கீழ் ஜனநாயகம் எப்படியெல்லாம் மீறப்படுகிறது? கிராமம் கிராமமாக தாக்குதல், கொலை, கற்பழிப்பு என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கட்சியினின் தொண்டர்களின் அட்டகாசத்தைப் பாருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காணொளி சுமார் 4 நிமிடங்கள் ஓடுகிறது.
घमंडिया फाइल्स के चौथे एपिसोड में देखिए…
TMC के शासन में बंगाल में चुनाव जीतने के लिए कैसे उड़ाई जाती है लोकतंत्र की धज्जियां,
मारपीट, हत्या और बलात्कार से गांव-गांव तक फैला है ममता बनर्जी के कार्यकर्ताओं का खौफ। pic.twitter.com/w4SVm3HzY7— BJP (@BJP4India) October 5, 2023
ஜார்ஜ் சோரஸ் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க தொழிலதிபர். இவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில், அதானிக்கு எதிராக ஹிடன் பர்க் அறிக்கை வெளியிட்டபோது, பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துத் தெரிவித்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பதும், நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















