மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் மாதம் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. தனிப் பெரும் கட்சியான காங்கிரஸ், சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020-ம் ஆண்டு சில எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதன் பிறகு, அவர் பா.ஜ.க.வில் சேர்ந்ததால், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்துக்கு நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், கடந்த 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மையை உறுதி செய்ய 1 இடம் குறைந்த நிலையில், பகுஜன் சமாஜ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இம்மாநிலத்தில் பா.ஜ.க. 73 இடங்களைக் கைப்பற்றியது. இம்மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. 15 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி முதல்கட்டமாகவும், 17-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
மிசோராம் மாநிலத்தில் முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றது. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. மீதி இடங்களில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 7 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க., பார்வர்டு பிளாக், சுயேட்சை தலா 1 இடங்களிலும் வெற்றிபெற்றன. இம்மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிசோராம் மாநிலத்திலும் மிசோ தேசிய முன்னணி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இத்தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்திருக்கிறார்.