2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் துறை சந்திரன் ஆய்வுக்கான சாலை வரைபடத்தை உருவாக்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியா விண்வெளித் துறையில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க முடியுமா என்று சர்வதேச நாடுகள் சந்தேகத்தைக் கிளப்பி இருந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிக் காட்டியது.
இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. இந்த விண்கலமும் தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, இத்திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்திருக்கிறது. அதாவது, 3 முறை ஆளில்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்தி, அதன்பிறகு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதன் முதல்கட்ட சோதனையை அக்டோபர் 21-ம் தேதி நடத்த முடிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில்தான், ககன்யான் திட்டம் குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இத்திட்டத்தின்போது, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்தும், புதிய இலக்கை நாம் அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “2025-ம் ஆண்டில் ககன்யான் ஏவுதலை உறுதிப்படுத்தும் வகையில், பணியின் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். மேலும், சமீபத்திய சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 மிஷன்கள் உட்பட இந்திய விண்வெளி முயற்சிகள் வெற்றியைக் கட்டி எழுப்பி இருக்கும் நிலையில், இந்தியா புதிய இலக்கை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகளை பிரதமர் உற்சாகப்படுத்தினார்.
மேலும், 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ (இந்திய விண்வெளி நிலையம்) அமைக்கப்பட வேண்டும். அதேபோல, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் துறை சந்திரன் ஆய்வுக்கான சாலை வரைபடத்தை உருவாக்கும். இது, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம் (என்.ஜி.எல்.வி.), புதிய ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.