உலகிலேயே பயங்கர ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் உதவியுடன் அதானி குழுமம் மக்கள் பணத்தையும், நாட்டின் வளங்களையும் திருடுவதாகக் குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்த செய்தி இங்கிலாந்து நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருந்ததையும் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, உலகிலேயே பயங்கரமான ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தேசியத் தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டியா, “காந்தி குடும்பம்தான் உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம். ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
இவர்களில் சோனியா காந்தி ஜாமீனில் இருக்கிறார். ராகுல் காந்தி ஜாமீனே வாங்கவில்லை. பிரதமர் மோடி சொன்னதைப் போல ஊழல் என்பது காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது. அதானி ஊழல் செய்ததாகப் பேசும் இவர்கள், நேஷனல் ஹெரால்டு ஊழல் மற்றும் ராபர்ட் வதேராவின் ஊழல் பற்றி பேசுவார்களா? தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் அழிவை சந்தித்து வருகிறது.
காங்கிரஸுக்குத்தான் பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்கும் பழக்கம் இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து காந்தி குடும்பத்தின் நலனுக்காக பயன்படுத்துவார்கள். இது ஊழல் காங்கிரஸ் தலைவர்களின் பிறப்புரிமை போன்றது. எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர்களின் அகம்பாவத்தையும், ஆணவத்தையும் அழிப்பது பா.ஜ.க.வின் பொறுப்பு” என்றார்.