வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார்.
நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது. ஆகவே, காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் கட்சி என்று பா.ஜ.க. தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது.
அப்படியானால், அமித்ஷா மகன் என்ன செய்கிறார்? அவர்தானே இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். அதேபோல, ராஜ்நாத்சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்? இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்து மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாரிசு அரசியல் பற்றிய சான்றிதழ் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பதாக நினைக்கிறேன். அமித்ஷாவின் மகன் என்ன செய்கிறார் என்று கேட்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காங்கிரஸ் கட்சியிடம் பதில் சொல்ல ஒன்றுமில்லை.
வாரிசு அரசியலுக்கும், சமாதான அரசியல் செய்வதற்கும் பொய் சொல்வதையும், குழப்பத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சியின் பழகிவிட்டார்கள். காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது. அவர்கள் தரும் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை.
இது குழப்பத்தைப் பரப்புவதற்கான ஒரு வழியாகும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் ஒன்றரை ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அப்போது, மாநிலத்திற்கு அவர் என்ன செய்தார்? ஏழைகளின் நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
மேலும், அதானியைப் பிரதமர் மோடி பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்துப் பேசிய பிரஹலாத் படேல், “பிரதமர் மோடி அளித்த நேரடி பலன்களைப் பொதுமக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்திக்கு அடிப்படை யதார்த்தம் புரியவில்லை” என்றார்.