காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை தொடர்புகொண்டு, மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.
இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருப்பதோடு, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸுடன் பேசினேன். காஸா அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். மேலும், பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புகிறோம் என்று உறுதியளித்தேன்.
இது தவிர, காஸா எல்லையில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையையும் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, தனது வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி, “பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் பிராந்தியத்தில் மனிதாபிமான நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடுமையாக கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவோம்.
இஸ்ரேல் மீதான கொடூரமான தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம். தீவிரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச சமூகம் ஒன்றாக நிற்க வேண்டும். பாலஸ்தீன விவகாரத்தில், இரு நாடுகளின் தீர்வுக்கான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது” என்றார்.
காஸா மருத்துவமனையில் நேற்று தாக்குதல் நடந்த பிறகு, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் துயரமான இழப்பு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நடக்கும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாகும். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Spoke to the President of the Palestinian Authority H.E. Mahmoud Abbas. Conveyed my condolences at the loss of civilian lives at the Al Ahli Hospital in Gaza. We will continue to send humanitarian assistance for the Palestinian people. Shared our deep concern at the terrorism,…
— Narendra Modi (@narendramodi) October 19, 2023