ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பாரதப் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக் கோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ககன்யான் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ககன்யான் திட்டம் பற்றிய விரிவான கண்ணோட்டம் மற்றும் திட்ட அறிக்கைகள் விண்வெளித் துறை சார்பில் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தின்போது, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும். இதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் துரிதமாகச் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்.
அதேபோல, வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் உள்ளிட்ட கோள்களுக்கு இடையேயான பயணங்களில் நாம் பணியாற்ற வேண்டும். இந்த சாதனையை அடைய, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்தின் வளர்ச்சி, புதிய ராக்கெட் ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும். அதற்கான முன்னெடுப்புப் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவாகும். இச்சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.
இக்கூட்டத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விரிவாக எடுத்துக் கூறினார்.