மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எழுதி இருக்கும் திறந்த கடிதத்தில், “உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ம.பி.யில் மீண்டும் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச மக்களுக்கு ஒரு திறந்த கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “மத்தியப் பிரதேசத்திற்குச் செல்லும் போதெல்லாம் மக்களின் அபரிமிதமான அன்பையும் ஆற்றலையும் உணர்கிறேன். ஆகவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் இந்த முறையும் நாங்கள் இரட்டை இன்ஜின் ஆட்சியை அமைப்போம் என்கிற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இரட்டை இன்ஜின் ஆட்சியில் மத்தியப் பிரதேசம் அடைந்துள்ள முன்னேற்றம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மத்தியப் பிரதேசம் நோய்வாய்ப்பட்ட மாநிலமாக இருந்தது. தற்போது வலுவான, வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட மாநிலமாக மாறி இருக்கிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மாநிலம் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது.
2003-க்கு முன்பு மாநிலம் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருந்த காலத்தை யாரால் மறக்க முடியும்? இந்த 20 ஆண்டுகளில் முதல்வர் சௌகான் தலைமையில், 1 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு, 16% பொருளாதார வளர்ச்சியுடன் மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. மேலும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதோடு, 28,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தின் வளர்ச்சியானது, ஏழைகளின் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முழுமையான வளர்ச்சியானதாக இருக்கும். மேலும், அது முழு நாட்டிற்குமான வளர்ச்சிக்கு ஒரு அளவுகோலாக இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்த 1.36 கோடிக்கும் அதிகமான மக்கள் உட்பட ஒவ்வொரு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பா.ஜ.க. அரசு திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறது.
சகோதரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக நாங்கள் உழைத்திருக்கிறோம். மேலும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நல்வாழ்வுக்கான செயல் திட்டங்கள் மூலம், அவர்கள் பிரகாசமான எதிர்காலத்தைக் காண்கிறார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, மத்தியப் பிரதேசம் பல்வேறு வளர்ச்சிக் குறைபாடுகளை எதிர்கொண்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது.
நாங்கள் மத்தியப் பிரதேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்கியது மட்டுமல்லாமல், அதன் புகழ்பெற்ற வரலாற்றையும் பாதுகாத்திருக்கிறோம். உங்களின் அயராத முயற்சிகள் மற்றும் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தால் மத்தியப் பிரதேசம் இந்தியாவின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. எனக்கு எப்போதுமே மத்தியப் பிரதேசத்துடன் சிறப்புத் தொடர்பு உண்டு.
இதன் காரணமாக நீங்கள் என் மீது அளவற்ற அன்பைப் பொழிந்து, 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுத் தந்தீர்கள். அதேபோல, வரவிருக்கும் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் உங்களின் அசைக்க முடியாத ஆதரவை எனக்கு அளிப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பா.ஜ.க. மீதான உங்கள் நம்பிக்கையுடன், நாங்கள் மீண்டும் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தை அமைப்போம். உங்களுக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.