கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில், இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொது மக்களை மீட்கும் வகையில் விமான ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் மற்றும் அவசரக் காலங்களில் பொது மக்களை மீட்கும் வகையில் ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது போன்ற தருணங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை தரை இறக்கும் வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக, கடந்த 2021 -ம் ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட 29 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 13 இடங்கள் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இதனிடையே, தமிழகத்தில் திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அதாவது புளிச்சபாலம் முதல் தைலாபுரம் வரை 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு 33 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் பயன்படுத்தி விமான ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 90 கோடி ரூபாய் ஒதுக்கியது. இத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இதற்கு மாறாகக் கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் விமான ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கு சுமார் 150 கோடி வரை செலவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.