ஹிந்து மதமும், அதன் கலாச்சாரமும், அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளித்து வருகிறது. இதனால்தான், இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்ற பிரச்சனைகளில் இந்தியாவில் போர் ஏற்பட்டதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பள்ளியில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசுகையில், “மற்ற எல்லா இடங்களிலும் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன்-ரஷ்யா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நம் நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகளில் ஒருபோதும் போர் நடந்ததில்லை. இதுபோன்ற சண்டைகள் எங்களுக்கு இருந்ததில்லை. இதுபோன்ற பிரச்சனைகளில் நாங்கள் யாருடனும் சண்டையிட மாட்டோம். ஏனெனில், எல்லா மதங்களையும், பிரிவினரையும் மதிக்கும் கலாச்சாரம் எங்களிடம் உள்ளது. அதுதான் இந்து மதம்.
இந்தியாவை பொறுத்தவரை இந்து மதம், கலாசாரம் ஆகியவை அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. இது இந்துக்களின் நாடு. அதற்காக மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லீம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.
இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால், இந்த பிரச்சனையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்” என்றார்.
கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை நடத்தினர். இதில், 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக, காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாத முகாம்கள் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 4,385 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் போர் 16-வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் போன்ற பிரச்சனைகளில் இந்தியா ஒருபோதும் போரைக் கண்டதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.