நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி கிடைக்காது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு நேற்று மாலை சென்றார். அவரை மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மேலும், பன்னோக்கு விளையாட்டு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார். பின்னர், குவாலியரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் நீண்டகால திட்டங்களுடன் நாடு எடுத்த முடிவுகள் அசாதாரணமானது. சுமைகளில் இருந்து நாட்டை விடுவித்திருக்கிறோம்.
முந்தைய அரசுகள் வெளிநாடுகளில் இருந்து செயற்கைக்கோள்களை வாங்கி வந்தன. ஆனால், தற்போது விண்வெளித் துறையை இளைஞர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இதன் பலனாக நமது இளைஞர்கள் பெரிய அளவில் யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நமது இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் நிலை இருக்கிறது.
நலத்திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவோம். இனிவரும் காலங்களில், நமது இளைஞர்கள் உறுதியுடன் பணிகளை முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிகவும் முக்கியமானவை. அதை நாம் எந்த விலை கொடுத்தாவது மேம்படுத்த வேண்டும்.
நாட்டின் புதிய தலைமுறையினருக்கும் இந்த நேரம் சிறப்பானதாக இருக்கும். நம்மால் நிலவுக்குச் செல்ல முடிந்திருக்கிறது. எனினும், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டும் வரை, ஒவ்வொரு குடும்பமும் நல்ல வீடு பெறும்வரை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதாரம் கிடைக்கும் வரை நமது செயல்பாடுகள் குறையாது.
நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி கிடைக்காது” என்றார்.