இஸ்ரேல் இராணுவத்தின் அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை விடுவித்திருந்த ஹமாஸ் தீவிரவாதிகள், தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர்.
இஸ்ரேல் மீது காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவிகளை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினர். இதில், 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். அதேபோல, 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழித் தாக்குதல் மூலம் ஹமாஸ் தீவிரவாதத் தலைமையகம், தீவிரவாத முகாம்களை அழித்து வரும் இஸ்ரேல் இராணுவம், காலாட்படை மூலம் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், இஸ்ரேலும் வலியுறுத்தின. இதற்கு பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். ஆனால், இஸ்ரேல் இதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. காஸா மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இஸ்ரேல் நாட்டின் இந்த அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். இதன் பிறகு, தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நூரிட் கூப்பர், யோச்செவ்ட் லிப்ஷிட்ஸ் ஆகிய வயதான 2 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கின்றனர். உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக மேற்கண்ட வயதான இருவரையும் விடுவித்திருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருக்கிறார்கள்.
எனினும், 18-வது நாளாக இன்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிணைக் கைதிகளையும் விடுவித்து வருவது குறிப்பிடத்தக்கது.