திருவண்ணாமலை அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தேன்கனிக்கோட்டை அடுத்த கௌமங்கலத்தில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிய 11 பேர் ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாட காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அந்த காரை கெளமங்களத்தை சேர்ந்த புனித்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். சுற்றுலா முடித்து விட்டு நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மேல் செங்கம் கிருஷ்ணா நகர் கூட்டு சாலையில் கார் சென்ற போது, பெங்களூருவில் இருந்து எதிரே வந்த அரசுப்பேருந்து காரின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிசிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.