ரஷ்ய அதிபர் புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அதிபர் மாளிகை தெரிவித்திருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை குறித்து, அடிக்கடி பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், புடினுக்கு புற்றுநோய் என்றும், இதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், தற்போது அதிபர் புடினுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
அதாவது, கடந்த 22-ம் தேதி இரவு ரஷ்ய அதிபர் புடினின் அறையில் ஏதோ சத்தம் கேட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சென்றதாகவும், அங்கு புடின் தரையில் விழுந்து கிடந்ததாகவும், அவரது அறையில் இருந்த மேஜை கவிழ்ந்து கிடந்ததாகவும், அருகில் மதுபாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்ததாகவும் தகவல் வெளியானது.
மேலும், திடீர் மாரடைப்பு ஏற்பட்டுத்தான் புடின் கீழே விழுந்ததாகவும், அதிபர் மாளிகையில் இருக்கும் மருத்துவ வசதிகள் கொண்ட அறைக்கு புடினை கொண்டு சென்று, சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றியதாகவும், தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதிபர் புடின் உடல்நிலை குறித்து வெளியான தகவலை ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மறுத்திருக்கிறது. இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிபர் புடின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ஆனால், அதிபர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் தகவல்கள் வெளியானது. இவை முற்றிலும் பொய்யான தகவல்” என்று தெரிவித்திருக்கிறது.