அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22 ஜனவரி 2024 அன்று நடைபெறுகிறது. இதற்கான அழைப்பை ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா குழு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கியது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு கட்டப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 2020ல் அரசு சார்பில் ஸ்ரீ இராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை தான் இராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்துள்ளார்.
இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும்.
இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா குழு அழைப்பை வழங்கியது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22 ஜனவரி 2024 அன்று நடைபெற உள்ளது, இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
















