“இண்டி” கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் காணும் வகையில், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள ஹோட்டலில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியை பொதுமக்களோடு சேர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கண்டு களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதியை, எம்.எல்.ஏ.வாக்கி, பின்னர் அமைச்சராகவும் ஆக்கி விட்டார்கள். மேலும், துணை முதல்வராக்கவும் அவரது தந்தை ஸ்டாலின் துடித்து வருகிறார். தி.மு.க.வில் இளவரசர்களுக்கே மரியாதை. அங்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராக்க முடியுமா?
பா.ஜ.க.வில் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ‘இண்டி’ கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தீவிரவாதம் தலைதுாக்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பாலஸ்தீன கொடியேற்றி இருக்கிறார்கள்.
சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தில், ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பப்பட்டிருக்கிறது. கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கவர்னர் மாளிகை முன்பு, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் யார் பின்னணி, யார் உதவி செய்கின்றனர் என்பதை கண்டறிய வேண்டும்.
அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து தேசியத் தலைமைதான் முடிவெடுக்கும். பா.ஜ.க.வைப் பொறுத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணி களில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறினார்.