இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நாளை தொடங்கி வைக்கிறார்கள்.
இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கி.மீ. தொலைவுக்கு இரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்படவிருக்கிறது.
இந்த இரயிலுக்கு அகர்தலா-அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு இரயில் சேவை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த இரயில் பாதை 5 கி.மீ. தூரம் இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் இடம்பெறுகிறது. இந்த இரயில் சேவை, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலா நகரிலிருந்து டாக்கா வழியாக வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது.
இந்த இரயில் இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் சர்வதேச குடியேற்ற மைய இரயில் நிலையத்திலும் நின்று செல்லும். அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். மேலும், இந்த இரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அஸ்ஸாம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரயில் பாதையில் 1 பெரிய பாலமும், 3 சிறிய பாலங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. இதற்கான சோதனை இரயில் ஓட்டம் நேற்று நடைபெற்றது. தற்போது கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்குச் செல்ல 31 மணி நேரமாகிறது. இந்த இரயில் பாதைத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் பயண நேரம் 10 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரயில் பாதை திட்டத்துக்காக இந்திய இரயில்வே தனது பங்காக இதுவரை 154 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. இந்த இரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கின்றனர்.