மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வசித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்குச் சென்று குடியேறிய 200-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கொழும்பில் “நாம் 200” என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். அதேபோல, கொழும்பில் இந்தியா- இலங்கை வர்த்தக உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதிலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, தமிழர்களின் தாயக நிலப் பகுதியான திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் செல்கிறார். திருகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் பார்வையிடுகிறார்.
மேலும், யாழ்ப்பாணம் செல்லும் நிர்மலா சீதாராமன், அங்கும் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளை ஒன்றை திறந்து வைக்கிறார். இதுதவிர, யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண கலாசார மையம் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதோடு, வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்.
நிதியமைச்சரின் இப்பயணத்தின்போது, பௌத்த புனிதத் தலமான தலதா மாளிகை, அனுராதபுரம் ஜெயஸ்ரீ மகாபோதி மற்றும் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆகிய இடங்கிலும் வழிபாடு செய்கிறார்.
கடந்த மாதம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றார். தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை செல்கிறார்.